மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் மிக பிரசித்தி பெற்றது. இங்கு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(13ம் தேதி) காலை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு அம்பாளுடன், தாயுமானசுவாமி அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளினார். மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். காலை 6.15 மணியளவில மேஷ லக்னத்தில் தேரோட்டம் துவங்கியது. முன்னதாக சண்டிகேஷ்வரர் பரிவாரா மூர்த்திகள் சிறு தேரில் சென்றன.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேருக்கு முன் சிவன், பார்வதி உள்பட பல்வேறு தெய்வங்கள் வேடமணிந்து பக்தர்கள் சென்றனர். தேர் நான்கு சித்திரை வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் தாயுமான சன்னதிக்குச் சென்றடைந்தது. தேரோட்டத்தையொட்டி அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது. ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளை சாற்றி தேர்க்கால் கண்டு அருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை பகல் 12 மணியளவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு மேல் தெப்பக்குளம் கூடப்பள்ளி மண்டபத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. இரவில் கொடியிறக்கம் நடக்கிறது. 19ம் தேதி காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்திக்கு பிராய்ச்சித்த அபிஷேகத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Related Stories: