குன்னூரில் சாலை விரிவாக்க பணிக்கு நூற்றாண்டு பழமையான சோலை மரத்தை வேரோடு அகற்றியதால் அதிருப்தி

குன்னூர் : குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நூற்றாண்டு பழமையான சோலை மரத்தை பொக்லைன் மூலம் வேரோடு அகற்றியதால் வன ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் புதிதாக தடுப்புச்சுவர் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

யானை வழித்தடத்தை மறித்து சாலை அமைத்து வருவது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து. பொக்லைன் உதவியுடன் நூற்றாண்டு பழமையான மரங்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காட்டேரி அருகே நூற்றாண்டு பழமையான சோலை மரத்தை பொக்லைன் கொண்டு அகற்றியுள்ளனர். பழமையான மரம் சாலையில் நடுவே விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராட்சத மரம் விழும் போது அவ்வழியே வாகனங்கள் செல்லாததால் பெறும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

நீலகிரியின் பாரம்பரியமான சோலை மரக்காடுகளையும், சோலை மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில் இது போன்ற நூற்றாண்டு பழமையான மரங்களை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அகற்றி வரும் சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: