கார்பைடு கல்லால் பழுக்க வைத்த 500 கிலோ மாம்பழம் பறிமுதல்-உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

தர்மபுரி : தர்மபுரி நகரில் உள்ள பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி, கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த, 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு மாம்பழ சீசன் காரணமாக மார்க்கெட்டிற்கு மாம்பழங்கள் வரத்துவங்கி உள்ளது.இந்நிலையில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால் ஆகியோர் கொண்ட குழுவினர், தர்மபுரி பஸ் நிலையத்தில் உள்ள பழக்கடைகள், டேக்கீஸ்பேட்டை, சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மாம்பழ குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

ஒரு சில குடோன்களில் கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை தடங்கம் குப்பை குடோனில் கொட்டி அழித்தனர். மேலும், இரண்டு கடைகளின் உரிமையாளர்களுக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மாம்பழங்களை கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்க கூடாது.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்து சென்றார்.

Related Stories: