பலியான மாணவி சாப்பிட்ட சிக்கன் ஷவர்மாவில் புதிய ரக பாக்டீரியா: கேரள அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், காசர்கோடு அருகே செறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவநந்தா என்ற பிளஸ் 1 மாணவி பேக்கரியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் இறந்தார். இதே பேக்கரியில் ஷவர்மா சாப்பிட்ட 50க்கும்  மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கேரளா முழுவதும்  ஓட்டல்கள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை  நடத்தினர். இந்த சோதனையில் அசுத்தமான முறையில் உணவு தயாரித்த 100க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், பேக்கரிகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதற்கிடையே, பலியான மாணவி சாப்பிட்ட பேக்கரியில் இருந்து சிக்கன் ஷவர்மா,  உணவுப் பொருட்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில், ஷவர்மாவில் வாந்தி, மயக்கம் வயிற்றுப்போக்கு உள்பட நோய்களை ஏற்படுத்தும் ஷிகெல்லா பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷவர்மாவில் ‘சால்மொனெல்லா’ என்ற ஒரு புதிய வகை பாக்டீரியா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்  கூறுகையில், ‘‘காசர்கோட்டில் பலியான மாணவி  சாப்பிட்ட பேக்கரியிலிருந்து ஷவர்மா, மிளகுப் பொடி உள்பட பொருட்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில் ஷவர்மாவில் ஷிகெல்லா பாக்டீரியாவும், மிளகுப் பொடியில் சால்மொனெல்லா என்ற பாக்டீரியாவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் ஓட்டல்கள், பேக்கரிகளில்  மோசமான உணவு விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்து உள்ளன. இதனால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர நடத்தி வருகின்றனர்,’’ என்றார்.

* ‘சால்மொனெல்லா’ பாக்டீரியா உடலில் பரவினால் கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும்.

* டைபாய்டு காய்ச்சல் வருவதற்கும் இந்த பாக்டீரியாதான் ஒரு வகையில் காரணமாகும்.

* உடனடியாக  கவனிக்காவிட்டால் இந்த பாக்டீரியா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

Related Stories: