நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை ஏவி சோதனை: வட கொரியா தொடர்ந்து அடாவடி

சியோல்: நீர்மூழ்கி கப்பலில் இருந்து தொலைதூர இலக்கை தாக்கும் ஏவுகணையை வடகொரியா ஏவி பரிசோதனை செய்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் வடகொரியாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வடகொரியா நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை நடத்தியது. வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில், ஜப்பான் கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் ஏவியது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. இதனை ஜப்பானின் கடலோர காவல்படையும் உறுதிபடுத்தியுள்ளது. ஆனால், நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. தென் கொரியாவின் ராணுவ தளபதி கூறுகையில், ‘‘கிழக்கு கடற்கரை நகரான சின்போவில் ஏவுகணை பரிசோதனை நடந்தது.வட கொரியாவின், சின்போவில் நீர்மூழ்கி கப்பல் கட்டும் தளம் உள்ளது’’ என்றார். இது வடகொரியா இந்த ஆண்டில் நடத்தியிருக்கும் 15வது ஏவுகணை சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: