விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் 6 காவலர்களுக்கு 20ம் தேதி வரை சிறை: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விசாரணை கைதி கொலை வழக்கில் ஏற்கனவே 2 போலீசார் கைது செய்யப்பட்ட 6 காவலர்களையும் வரும் 20ம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் கடந்த மாதம் 19ம் தேதி அதிகாலை கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் காவல் நிலையத்தில் மர்மான முறையில் இறந்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் தலைமை செயலக காலனி காவல் நிலையம் சென்ற சிபிசிஐடி போலீசார் ஆய்வாளர் செந்தில் குமார் உள்ளிட்ட காவல் துறையினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமைச் செயலக காலனி காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் குமார், உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படை வீரர் தீபக், உதவி ஆய்வாளர் கணபதி, நிலைய எழுத்தர் முனாப், வாகன ஓட்டுனர் கார்த்திக், தலைமை காவலர் குமார், மகளிர் காவலர் ஆனந்தி ஆகிய 9 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று காலை சுமார் 11 மணி முதல் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் விக்னேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 5 காவல் துறையினரை கைது செய்ய வேண்டும் என தமிழக டி.ஜி.பி.க்கு நேற்று பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் 9 காவல் துறையினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முதற்கட்டமாக எழுத்தர் முனாப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகிய 2 போலீசாரை விக்னேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். குறிப்பாக வாகன சோதனையின் போது விக்னேஷை காவலர் பவுன்ராஜ் தாக்கியதும், பின்னர் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து முனாப் தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஊர்காவல் படை வீரர் தீபக், தலைமை காவலர் குமார் மற்றும் இரு காவலர்கள்  என 4 பேரை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கைதான 6 பேரையும் சிபிசிஐடி போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களை வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து, 6 பேர் சிறையில் அடைக்கப் பட்டனர். 

Related Stories: