மேற்கு வங்கத்தில் பரபரப்பு பாஜ இளைஞரணி தலைவர் மர்ம சாவு: அமித்ஷா நேரில் அஞ்சலி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜ இளைஞரணி தலைவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநிலம், காசிபூர் பாஜ இளைஞரணி தலைவர் அர்ஜூன் சௌராசியா. 2 நாள் பயணமாக மாநிலத்துக்கு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமான நிலையத்தில் இருந்து பைக் பேரணியாக சென்று வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அர்ஜூன் ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிலையில் கோஷ் பாகன் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அர்ஜூன் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ஆளும் திரிணாமுல் காங்கிரசால் அர்ஜூன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் வரும் நாளில் பாஜ தலைவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் அமித் ஷா உயிரிழந்த அர்ஜூனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அர்ஜூன் மரணத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர் அமித் ஷா, இது தொடர்பாக அரசு அறிக்கை தர வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். மாநிலத்தில் அச்சுறுத்தலான சூழலை உருவாக்க முயற்சிப்பதாக ஆளும் திரிணாமுல் அரசை அவர் குற்றம்சாட்டினார்.

Related Stories: