திருப்பதியில் கடத்திய சிறுவனை 5 நாட்களுக்கு பிறகு ஒப்படைத்த பெண்: கைது செய்து போலீஸ் விசாரணை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதியில் வெங்கடேசன்சுவாதி தம்பதியினர் அங்கு வரும் பக்தர்களுக்கு நாமம் வைத்து அவர்கள் வழங்கும் காசு வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர். கடந்த 1ம்தேதி சுவாதி தனது மூத்த மகன் கோவர்த்தனனுடன் (5) ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள அகிலாண்டம் அருகே பக்தர்களுக்கு நாமம் வைத்து கொண்டு இருந்தார்.அப்போது, அங்கு தனியாக விளையாடி கொண்டிருந்த கோவர்தனன் மாயமானான். இதுகுறித்த புகாரின்பேரில் திருமலை போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுவனை ஒரு பெண் கடத்தி சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், அந்த பெண் நேற்று கோவர்தனனை அழைத்து வந்து திருமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சிறுவனை கடத்திய பெண் கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த பவித்ரா. இவர், கோவர்த்தனனை கடத்திக்கொண்டு தனது ஊருக்கு சென்றார். இதையறிந்த பவித்ராவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இந்த சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிடு என அறிவுரை கூறியுள்ளனர். இதையடுத்து பவித்ரா, திருமலை காவல் நிலையத்திற்கு வந்த சிறுவனை ஒப்படைத்தார். சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். பவித்ராவை கைது செய்து சிறுவனை கடத்தியது ஏன் என விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.

Related Stories: