அதிபர், பிரதமர் பதவி விலகக் கோரி இலங்கையில் முழு அடைப்பு போராட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொழும்பு: இலங்கையில் பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி, கடந்த சில வாரங்களாக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் கோத்தபய அரசை கவிழ்க்க எதிர்கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் இன்று 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பலதுறை தொழிற்சங்கங்கள், ஆசிரியர், ரயில், பேருந்து, சுகாதாரம், வங்கி, மின்சாரம், அஞ்சல், துறைமுகம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைசார் தொழிற்சங்கங்கள் 1,000க்கும் மேற்பட்டவை இன்றைய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

அதேபோல் நள்ளிரவு 12 மணி முதல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து இயக்கத்தை நிறுத்தினர். இலங்கை அரசு மருத்துவமனை அதிகாரிகள் சங்கமும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக கையில் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தை நடத்தினர். அரசு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால், அரசுத் துறை அலுவலக சேவைகள் முடக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால் பெட்ரோல், டீசல் விநியோக மையங்கள் தொடர்ந்து இயங்கியதால், எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இருந்தும் ஆளுங்கட்சிக்கு ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் செயற்படும் தொழிற்சங்கங்கள், இன்றைய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: