யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக்: 17வது பைனலில் ரியல் மாட்ரிட்

மாட்ரிட்: யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக்  அரையிறுதி 2வது சுற்றில் 2வது ஆட்டத்தில் நேற்று  ஸ்பெயினின்  மாட்ரிட் நகரில் நடந்தது. அதில் ரியல் மாட்ரிட்(ஸ்பெயின்), மான்செஸ்டர் சிட்டி(இங்கிலாந்து) அணிகள் மோதின. வெளியூரில் விளையாடினாலும்  மான்செஸ்டர் வீரர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். முதல் பாதியில் யாரும் கோலடிக்கவில்லை. தொடரந்து 2வது பாதியிலும் வேகம் காட்டிய மான்செஸ்டரின் மெஹ்ரஸ் 73வது நிமிடத்தில் கோலடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை எந்த அதிசயமும் நடக்காததால் மான்செஸ்டர் வெற்றி உறுதியாகும் நிலை. ஆனால் கடைசி விநாடியில் மாட்ரிட் வீரர் பென்சிமா தட்டித் தந்த பந்தை எதிரணி வீரர்களை ஏமாற்றி  ரோட்ரிகோ அழகாக கோலாக்கினார். அதனால் ஆட்டம் 1-1 என்ற கோல கணக்கில் சமனில் முடிந்தது.

அதனால் மேலும் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் விளையாட அனுமதிக்கப்பட்டது. அந்த கூடுதல் நேர ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் சக வீரர் அசென்சியோ தட்டி தந்த பந்தை ரோட்ரிகோ மீண்டும்  கோல் வலைக்குகள் திணித்தார்.

தொடர்ந்து 95 நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர்கள் செய்த தவறால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பென்சிமா கோலாக மாற்றினார். அதன் பிறகு இரு தரப்பிலும் கோல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. ஏற்கனவே நடந்த அரையிறுதி முதல் சுற்றின் ஆட்டத்தில் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. ஆனாலும் 6-5 என்ற மொத்த கோல்களின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் வெற்றிப் பெற்று 17வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. கடந்த ஆண்டு முதல் முறையாக இறுதி ஆட்டம் வரை முன்னேறிய மான்செஸ்டர் இந்த முறை ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.

Related Stories: