பேரறிவாளன் விடுதலை விவகாரம் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு

புதுடெல்லி: பேரறிவாளன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது? ஒரு வழக்கில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவரை விடுதலை செய்து, இதுதொடர்பான வழக்கை ஏன் முடிந்து வைக்கக் கூடாது? பேரறிவாளனை நீங்களே விடுதலை செய்கிறீர்களா அல்லது நீதிமன்றம் செய்யட்டுமா?’ என ஒன்றிய அரசுக்கு கேள்வியெழுப்பியதோடு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் மேற்கண்ட விவகாரத்தில் நேற்று எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு உள்ளது. இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் தமிழக ஆளுநர் பொம்மை போன்று செயல்படுகிறார். அதனால் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றைய விசாரணையின் போது பேரறிவாளன் விடுதலை குறித்த இறுதி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் என தெரியவருகிறது.

Related Stories: