மனைவியின் நகையை விற்று ரூ.4.50 லட்சம் செலுத்தியும் தீராத தொல்லை மொபைல் ஆப்பில் கடன் வாங்கிய கோவை வாலிபர் மாயம்: ‘‘தேடவேண்டாம்’’ என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதால் கலக்கம்

பவானி: மொபைல் ஆப்பில் கடன் வாங்கிய கோவை கிராபிக் டிசைனர் மாயமானார். கோவை உடையாம்பாளையம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் மரியஜோசப். இவரது மகன் அந்தோணி சார்லஸ் (31). கிராபிக் டிசைனர். இவருக்கும் ஈரோடு மாவட்டம் பவானி அம்மாபேட்டை சின்னப்பள்ளம் பகுதி எம்இஎல் வீதியைச் சேர்ந்த ரோஸ்லின் ஜெனிபர் (25) என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1.5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. அந்தோணி சார்லஸ் ஆன்லைன் மொபைல் ஆப்பில் அதிக கடன் வாங்கியதாக தெரிகிறது. வாங்கிய கடனை இவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. ஆனால் லோன் ஆப் நிறுவனம் கடும் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அந்தோணி சார்லஸ் வேலை சம்பந்மாக சென்னை செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அங்கிருந்து மனைவியை தொடர்பு கொண்ட அவர், கடன் அதிகமாக உள்ளதால் தற்கொலை செய்வதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரோஸ்லின் ஜெனிபர் கணவரை சமாதானப்படுத்தி ஊருக்கு வரவழைத்தார். பின்னர் தான் அணிந்திருந்த நகைகளை கழற்றிக்கொடுத்து விற்று கடனை அடைக்கும்படி கூறினார்.

அதன்படி நகைகளை விற்ற அந்தோணி சார்லஸ் 4.50 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தினார்.

அதன்பின்னர் ரோஸ்லின் ஜெனிபர் தனது கணவர், மகனுடன் சின்னப்பள்ளத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அந்தோணி சார்லஸ் பெருமாள்மலையில் உள்ள தனியார் மில்லில் கிராபிக் டிசைனராக வேலைசெய்து வந்துள்ளார். வழக்கம்போல் கடந்த மாதம் 25ம் தேதி வேலைக்குச் சென்ற அந்தோணி சார்லஸ் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் ரோஸ்லின் ஜெனிபர் செல்போனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் தான் வாங்கிய கடன்கள் இன்னும் முடியவில்லை என்றும், இதனால் கேரளாவுக்குச் செல்வதாகவும், தன்னைத் தேட வேண்டாம் என்று அதில் கூறியிருந்தார்.

அதன்பின்னர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் மொபைல் ஆப் கடன் பிரச்னை இன்னும் தீரவில்லை என்று கூறி கலங்கிய  ரோஸ்லின் ஜெனிபர்,  கணவர் குறித்து உறவினர், நண்பர்களிடம் விசாரித்து பார்த்தார். ஆனாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ரோஸ்லின் ஜெனிபர் அம்மாபேட்டை போலீசில் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அந்தோணி சார்லசை தேடி வருகிறார்கள்.

Related Stories: