கேப்டன் சாம்சன் அரை சதம்: ராஜஸ்தான் ராயல்ஸ் 152/5

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் குவித்தது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன் விளாசினார். வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேகெஆர் முதலில் பந்துவீசியது. பட்லர், படிக்கல் இருவரும் ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். படிக்கல் 2 ரன் மட்டுமே எடுத்து உமேஷ் யாதவ் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து பட்லருடன் கேப்டன் சாம்சன் இணைந்தார்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தது. பட்லர் 22 ரன் (25 பந்து, 3 பவுண்டரி) எடுத்து சவுத்தீ வேகத்தில் ஷிவம் மாவி வசம் பிடிபட்டார். சாம்சன் 38 பந்தில் அரை சதம் அடிக்க, கருண் நாயர் 13 ரன், பராக் 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சாம்சன் 54 ரன் (49 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஷிவம் மாவி பந்துவீச்சில் ரிங்கு சிங்கிடம் பிடிபட்டார்.

கடைசி கட்டத்தில் ஷிம்ரோன் ஹெட்மயர் அதிரடியில் இறங்க, ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் குவித்தது. ஹெட்மயர் 27 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஆர்.அஷ்வின் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் சவுத்தீ 2, உமேஷ், மாவி, அனுகுல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது.

Related Stories: