திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் 5 வயது சிறுவனை கடத்திய மர்ம பெண்: போலீசார் தீவிர வலை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் இருந்த 5 வயது சிறுவனை ஒரு மர்ம பெண் கடத்திச்சென்றுள்ளார். அவரை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதி தாமினேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணா. இவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நெற்றியில் நாமம் இட்டு அதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். அதன்படி நேற்று அவர் வழக்கம்போல் ஏழுமலையான் கோயில் நான்கு மாட வீதிகளில் பக்தர்களுக்கு நாமம் இடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவரது மகன் கோவர்தன்ராயல் என்கிற சிண்டு (5)  உடன் இருந்தான். சிறுவன் அப்பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். வெங்கட்ரமணா தனது பணியில் தீவிரமாக இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பார்த்தபோது மகனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறியபடியே கோயில் வளாகம் முழுவதும் தேடினார். இரவு வரை தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கடும் வேதனை அடைந்த வெங்கட்ரமணா திருமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவஸ்தான கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிசிடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் மாலை 5.45 மணி அளவில் கோயில் சுற்றுப்பகுதியில் இருந்த சிறுவன் கோவர்தனனிடம் மொட்டை அடித்திருந்த மர்ம பெண் ஒருவர்  நைசாக பேசுகிறார். பின்னர் கோவர்தனின் கையை பிடித்து அழைத்துக்கொண்டு திருமலையில் உள்ள பாலாஜி பஸ் நிலையத்திற்கு மாலை 6:15 மணிக்கு வருகிறார். அங்கிருந்து ஒரு பஸ்சில் இரவு 7.15 மணிக்கு ஏறி திருப்பதி பஸ் நிலையத்திற்கு சென்று அங்கு இறங்கியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகி இருந்தது.

அதன்பிறகு அந்த மர்ம பெண் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார், 5வயது சிறுவனை கடத்தி சென்ற பெண் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக திருமலை போலீசாருக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் கோவர்தனனையும், அவனை கடத்திய மர்ம பெண்ணையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: