கட்சியில் குழி பறிப்பதில் நம்பர் ஒன்... எடப்பாடி நண்பர் இளங்கோவனுக்கு சேலம் அதிமுகவில் கடும் எதிர்ப்பு

* மாவட்ட செயலாளராக ஏற்க முடியாது * ஒன்றிய செயலாளர் பரபரப்பு பேட்டி

சேலம்: எடப்பாடியின் நண்பரான இளங்கோவனை மாவட்ட செயலாளராக ஏற்க முடியாது, அவர் கொடநாடு வழக்கிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஏன் அறிவிக்கவில்லை. அவர் தலைமையில் செயல்பட முடியாது என சேலம் அதிமுக ஒன்றிய செயலாளர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.சேலம் புறநகர் மாவட்டம் சேலம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருப்பவர் வையாபுரி. இவர் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: 2004ம் ஆண்டில் இருந்து 18 ஆண்டுகளாக சேலம் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறேன். தற்போது கிழக்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறேன். எனது மனைவி மல்லிகா, சேலம் ஒன்றிய சேர்மன் பதவியில் இருந்து வருகிறார்.கடந்த 25ம் தேதி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக  நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. 24ம்தேதி, இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, மீண்டும் மாவட்ட செயலாளராக வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். அண்ணன்தான் மாவட்ட செயலாளர் என தெரிவித்தனர். இதையடுத்து நிர்வாகிகளை அழைத்துச் சென்று எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை, மலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தோம். அதனை அவர் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.

ஆனால் கட்சிக்காரர்கள் யாரும் எதிர்பாராத வகையில் இளங்கோவன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது  கட்சி நிர்வாகிகளுக்கு பேரதிர்ச்சியாகி விட்டது. சேலம் மாவட்டத்தில் அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றவருக்கு எப்படி மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கலாம்? ஜெயலலிதா வசித்த கொடநாடு இல்லம் கட்சித்தொண்டர்களுக்கு கோயிலாகும். அந்த கோயிலில் கொலை- கொள்ளை நடந்துள்ளது. இதில் தற்போது போலீஸ் விசாரணை வளையத்திற்குள் இளங்கோவன் இருப்பதாக  தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த நேரத்தில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி எப்படி வழங்கலாம். இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவரால் ஏன் கூற முடியவில்லை? அவரை விட அதிமுகவில் மூத்த நிர்வாகிகள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கியிருக்கலாமே? பெரும்பாலான ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன் மாவட்ட செயலாளர் ஆனதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள்.

 இளங்கோவனால் ஒன்றிய செயலாளர்கள் பொருளாதார ரீதியில் நலிவடைந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்களை சுரண்டியது இளங்கோவன். ஒன்றிய செயலாளர்களையும், எல்எல்ஏக்களையும் ஒன்றாக இருக்க விடுவது இல்லை, ஒவ்வொருவருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி பிரித்து வைத்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பல முறை தெரிவித்துவிட்டோம். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எடப்பாடி பழனிசாமியிடம் இளங்கோவன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார். இதனை வைத்தே எல்எல்ஏக்கள், நிர்வாகிகளை மிரட்டி வைத்துள்ளார். அவருக்கு ஏமாற்றும் திறமை  அதிகமாக இருக்கிறது.இளங்கோவன் எடப்பாடிக்கு நண்பரா? நிழலா என்பது  எங்களுக்குத் தெரியாது. இளங்கோவனுக்கு கட்சியில் நல்லபெயர் இல்லை. ஒன்றிய செயலாளர் ஒருவருடன் சேர்ந்து அதிமுக கவுன்சிலர்களை மாற்றுக்கட்சிக்கு அனுப்பி வருகிறார். கட்சியில் குழி பறிப்பதில் இளங்கோவன் நம்பர் ஒன். இப்படிப்பட்டவருக்கு எடப்பாடி பழனிசாமி எப்படி மாவட்ட செயலாளர் பதவி கொடுத்தார் என்பதை நினைத்துப்பார்க்க  முடியவில்லை.

ஜீரணிக்கவே முடியவில்லை. இளங்கோவனின் தலைமையில் என்னால் பணியாற்ற  முடியாது. எனவே எனது ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அதிமுக தொண்டராக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.சேலம் மாவட்ட அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவித எதிர்ப்பும் கிடையாது என கூறி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நியமித்த மாவட்ட செயலாளருக்கு ஒன்றிய செயலாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: