ஜம்மு காஷ்மீரில் 3 மாதங்களில் 32 தீவிரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படைகள் அதிரடி

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களில் 62 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்களை தேடியபோது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் இருந்ததால் உடனடியாக வீரர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

 இதனை தொடர்ந்து, வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் உள்ளூரை சேர்ந்த அஜய் ஹபிஸ், ஷாகித் ஆயுப் என அடையாளம் காணப்பட்டது. இவர்கள் அல் பதர் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து, தீவிரவாத தாக்குதல்களை நடத்தியது தெரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் ஐஜி விஜய்குமார் கூறுகையில், ‘‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தாண்டில் இதுவரை மொத்தம் 62 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 39, ஜெய்ஷ் இ முகமது- 15, ஹிஸ்புல் முஜாகிதீன் 6, அல் பதர் அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் இதில் பலியாகி உள்ளனர். கடந்த 3 மாதங்களில் மட்டுமே 32 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.” என்றார்.

Related Stories: