தொடர்ச்சியாக 5வது வெற்றியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அசத்தல்: 2வது இடத்துக்கு முன்னேற்றம்

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தியதுடன், புள்ளி பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் - பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீசியது. கேப்டன் டு பிளெஸ்ஸி (5), அனுஜ் ராவத் (0), விராத் கோஹ்லி (0) ஆகியோர் மார்கோ ஜான்சனின் வேகத்தில் நடையை கட்ட, ஆர்சிபி 8 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. கோஹ்லி தொடர்ந்து 2வது முறையாக ‘கோல்டன் டக் அவுட்’டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.

அடுத்து வந்த வீரர்களில் மேக்ஸ்வெல் 12 ரன், சுயாஷ் 15 ரன் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. ராயல் சேலஞ்சர்ஸ் 16.1 ஓவரிலேயே 68 ரன்னுக்கு சுருண்டது. ஹேசல்வுட் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் மார்கோ, நடராஜன் தலா 3, சுசித் 2, புவனேஷ்வர், உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 69 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது. அபிஷேக் ஷர்மா, கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

வில்லியம்சன் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடி ஆர்சிபி பந்துவீச்சை தவிடுபொடியாக்கிய அபிஷேக் ஷர்மா 47 ரன் (28 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி, ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் அனுஜ் ராவத் வசம் பிடிபட்டார். ராகுல் திரிபாதி அமர்க்களமாக சிக்சர் அடிக்க, சன்ரைசர்ஸ் அணி 8 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 72 ரன் எடுத்து வென்றது. வில்லியம்சன் 16 ரன், திரிபாதி 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

Related Stories: