நரிக்குடியில் நவீன வசதியுடன் பஸ் நிலையம்-அமைக்க மக்கள் கோரிக்கை

காரியாபட்டி : நரிக்குடியில் நிழற்குடை மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நரிக்குடியை சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராம மக்கள் பல்வேறு அடிப்படை காரணங்களுக்காகவும், வேலைக்காகவும் நரிக்குடிக்கு வந்து செல்கின்றனர். மேலும், நரிக்குடி பஸ் நிலையத்தில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், ராமேஸ்வரம், சிவகங்கை, வீரசோழன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.எனவே இந்த பஸ் நிலையம் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும். ஆனால் பஸ் நிலையத்தில் மக்களுக்கும், பேருந்து நின்று செல்ல போதிய அடிப்படை வசதிகள் இல்லை.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பஸ் நிலையத்திற்குள் சாலை வசதி இல்லாமல் வெறும் மண் சாலையாகவே உள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பஸ் நிலையத்தின் உள்புறம் உள்ள சாலை சேறும், சகதியுமாக மாறி விடும். ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

சேறும், சகதியுமாக உள்ள காலங்களில் பயணிகள் நடந்து செல்லவே முடியாத நிலையும் உள்ளது.மேலும், நரிக்குடி பஸ் நிலையத்தில் சிமெண்ட் அல்லது தார்ச்சாலை அமைத்தும், நிழற்குடைகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்று பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: