வேலூர்- ஆற்காடு சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போக்குவரத்து இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்-கலெக்டர் நேரில் ஆய்வு

வேலூர் : வேலூர்- ஆற்காடு சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை போலீஸ் பாதுகாப்புடன் ெநடுஞ்சாலைத்துறையினர் நேற்று அகற்றினர்.வேலூர்- ஆற்காடு சாலையில் தனியார் மருத்துவமனை, கடைகள், லாட்ஜ்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள், தள்ளுவண்டி கடைகள், கடைகளின் விளம்பர பலகைகள், தகர ஷீட் அமைத்து ஏராளமானோர் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலையில் நோயாளிகள், பொதுமக்களும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்தனர். மேலும் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றமாறு அறிவுறுத்தினர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடை உரிமையாளர்கள் தொடர்ந்து மெத்தனம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் வேலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சரவணன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ், உதவி பொறியாளர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி, வருவாய், காவல், மின்வாரிய அதிகாரிகள் நேற்று காலை ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆற்காடு சாலையில் தொடங்கிய இந்த ஆக்கிரப்பு அகற்றும் பணி கலெக்டர் அலுவலகம் வரை நீடித்தது.

இருபுறங்களிலும் ேஜசிபி இயந்திரம் மூலம் கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பின்னர் அகற்றப்பட்ட கட்டிடங்களின் கழிவுகளை லாரிகளில் ஏற்றி கொண்டு சென்றனர். தொடர்ந்து கடைக்காரர்கள் பலர் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொண்டனர். சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆற்காடு சாலையில் ஆய்வு செய்தார்.

 அப்போது போக்குவரத்து இடையூறாக வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது ஆர்டிஓ பூங்கொடி, தாசில்தார் செந்தில் உட்பட பலர் இருந்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்காக ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆக்கிரமிப்புகளுக்கு துணை போகும் மின் கம்பங்கள்

சாலையாக இருந்தாலும் சரி, தெருக்களாக இருந்தாலும் சரி, ஆக்கிரமிப்புகளுக்கு மின் கம்பங்களே துணை போகின்றன. சிலருக்கு ஆதரவாக துணைபோகும் அதிகாரிகள் சாலையோரம் நடவேண்டிய மின் கம்பங்களை கால்வாய்க்கு வெளியே ரோட்டில் நட்டு செல்கின்றனர். வேலூர்- ஆற்காடு சாலையில் இதுவரை பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். ஆனால் அகற்றிய சில நாட்களிலேயே மீண்டும் அதே இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்து விடுகிறது.

இதை எந்ததுறை அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை. இதனால் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அரங்கேறி வருகிறது. நேற்று ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றியதால் சாலை விசாலமாக காட்சி அளித்தது.  ஆனால் சாலையோரம் இருக்க வேண்டிய மின் கம்பங்கள் சாலையில் நடப்பட்டுள்ளதால் அதுவரையிலும் உள்ள பகுதிகளை சாலையோர கடைக்காரர்கள் ஆக்கிரமித்துக்கொள்கின்றனர்.

எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஆற்காடு சாலையில் உள்ள இந்த மின்கம்பங்களை அகற்றி உட்புறமாக தள்ளி நட வேண்டும்.  இதனால் போக்குவரத்து நெரிசலும் குறையும். பொதுமக்களும் நடைபாதையாக பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். எனவே, இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: