சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு தூக்கு: மகாராஷ்டிரா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தானே: சிறுமியிடம் ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று அவரை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு தூக்கு தண்டனை விதித்து மகாராஷ்டிரா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டி பகுதியில் வசிக்கும் பாரத் குமார் (33) என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு அதேபகுதியில் வசிக்கும் இரண்டாம் வகுப்பு சிறுமிக்கு (7) ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பதாக உறுதியளித்து, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம்  செய்தார். பின்னர் அந்த சிறுமியின் தலையை கல்லால் அடித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். சிறுமியின் பெற்றோர் மகளை தேடினர். ஆனால்  எங்கு பார்த்தும் கிடைக்கவில்லை.

கடைசியாக கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமியின் சடலத்தை  அப்பகுதி மக்கள் கண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கல்லை மீட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி பாரத் குமார் மீது ஐபிசியின் 364, 376, 302, போக்சோ சட்டத்தின்  கீழ் பல பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். இவ்வழக்கு போக்சோசிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி ஷிர்பேட் அளித்த தீர்ப்பில், ‘போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றவாளி பாரத் குமாருக்கு மரண தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது அரசுத் தரப்பில் 25 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்’ என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: