புனேயுடன் நிறுத்தப்பட்டது ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் குழித்துறை வழியாக மும்பைக்கு ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

நாகர்கோவில்:  மும்பை வரை இயக்கப்பட்ட ஜெயந்தி ஜனதாக புனேயுடன் நிறுத்தப்பட்ட நிலையில் குழித்துறை வழியாக மும்பைக்கு ரயில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.குமரி மாவட்டத்தின் வருவாய் அடிப்படையில் மூன்றாவது பெரிய ரயில் நிலையமாக குழித்துறை விளங்குகிறது. இந்த ரயில் நிலையம் 72 கி.மீ. தூரம் கொண்ட திருவனந்தபுரம் - நாகர்கோவில் ரயில் பாதையின் மையப்பகுதியில் அதாவது 38-வது கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. வருவாய் அடிப்படையில் இந்த நிலையம் என்எஸ்ஜி -5 பிரிவு (பழைய நிலை பி) ரயில் நிலையமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் தற்போது இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து தினசரி ரயில்கள் ஒரு வாராந்திர ரயில் நின்று செல்கிறது. 2019-20 ஆண்டு வருவாய் ஏழு கோடி ரூபாய் வரை கிடைத்துள்ளது. சராசரியாக தினமும் 6 ஆயிரம் பயணிகள் இந்த ரயில் நிலையம் வழியாக பயணம் செய்கின்றனர். 1984-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்டு வந்த ஜெயந்தி ஜனதா ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்கப்பட்டது. குழித்துறை ரயில் நிலையம் வழியாக கன்னியாகுமரிக்கு வந்த முதல் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இது ஆகும். நாகர்கோவிலுக்கும் திருவனந்தபுரத்துக்கு இடைப்பட்ட ரயில் நிலையங்களான இரணியல், குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றின்கரை ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் மும்பைக்கு செல்ல இந்த ரயிலை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த ரயில் மும்பை செல்லாமல் புனேயில் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் மும்பைக்கு தினசரி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை உள்ள பயணிகள் மும்பைக்கு செல்ல போதிய ரயில் சேவை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதி பயணிகள் திருவனந்தபுரம் அல்லது நாகர்கோவில் ரயில் நிலையம் சென்று சென்று அங்கிருந்து மும்பைக்கு இயக்கப்படும் ரயிலில் பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ரயில்வே துறை ஒரு மார்க்கம் அனைத்து ரயில்களையும் திருவனந்தபுரம் அல்லது கொச்சுவேளியில் இருந்து புறப்பட்டு கொல்லம், எர்ணாகுளம் நோக்கி இயக்கி வருகிறது. இதைப்போல் தமிழகத்தில் அனைத்து ரயில்களும் நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி, மதுரை நோக்கி இயக்கி வருகிறது. இதற்கு இடைப்பட்ட ரயில் நிலையங்களான குழித்துறை ரயில் நிலையம் வழியாக போதிய ரயில் வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே தற்போது நிறுத்தப்பட்டுள்ள ரயிலுக்கு மாற்று ரயில் மும்பைக்கு நேரடியாக செல்ல இயக்க வேண்டும் என்று இந்த பகுதி பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நேத்ராவதி, மும்பை ரயில்கள் நீட்டிக்கப்படுமா?

கடந்த பல ஆண்டுகளாக திருவனந்தபுரம் - லோகமான்ய திலக் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி  மும்பை ரயில் புனேவின் நிறுத்தப்பட்ட காரணத்தால் இதற்கு மாற்று ஏற்பாடாக இந்த திருவனந்தபுரம் - மும்பை நேத்ராவதி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.நாகர்கோவில் - திருவனந்தபுரம் ஒருவழிப்பாதையாக இருக்கின்ற காரணத்தால் புதிய ரயில்கள் இந்த பாதையில் இயக்க முடியாத நிலை உள்ளது. இது மட்டுமல்லாமல் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்கள் பராமரிக்கும் முனைய வசதிகள் மிகவும் குறைவாகவும் இடநெருக்கடியாகவும் உள்ளது.

ஆகவே இந்த கன்னியாகுமரி  புனே ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தி விட்டு திருவனந்தபுரம் - மும்பை நேத்ராவதி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று குழித்துறை பயணிகள் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது எந்த ஒரு இடநெருக்கடி பிரச்சனையும் வராது. எளிதாக நீட்டிப்பு செய்து இயக்க முடியும். நாகர்கோவிலிருந்து மதுரை, திருப்பதி, புனே வழியாக மும்பைக்கு வாரத்திற்கு ஆறு நாட்கள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை நாகர்கோவில் டவுன் வழியாக கொச்சுவேளி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று குழித்துறை ரயில் பயணிகள் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது.

Related Stories: