வேலூர் கோட்டை அகழியில் தொடர்ந்து செத்து மிதக்கும் மீன்களை அகற்றாமல் மெத்தனத்தால் தொடரும் துர்நாற்றம் : வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி

வேலூர்: வேலூர் கோட்டை அகழியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றாததால் தொடர்ந்து வீசும் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.வேலூரில் வரலாற்று புகழ்மிக்க கோட்டை அமைந்துள்ளது. 133 ஏக்கர் பரப்பளவிலான கோட்டைக்கு ஒரே ஒரு நுழைவுவாயில் உள்ளது. கோட்டையை சுற்றிலும் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி அமைந்துள்ளது. இன்றும் இந்தியாவில் நல்ல நிலையில் உள்ள தரைக்கோட்டைகளில் வேலூர் கோட்டை பிரதான இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹33 கோடி மதிப்பீட்டில் கோட்டையை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. கோட்டையின் உட்புறம் நடைபாதை, குடிநீர் வசதி, கேன்டீன் வசதி, உணவருந்தும் வசதி, அலங்கார மின்விளக்குகள், ஒளி ஒலி அரங்கம், கோட்டை அகழியை தூர்வாருதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அகழி தூர்வாருதல், கோட்டைக்குள் சாலைப்பணிகள், விளக்குத்தூண்கள் என ஒரு சில பணிகள் மட்டும் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் கோட்டை அகழியின் வடகிழக்கு மூலை தொடங்கி வடமேற்கு மூலை வரையும், கோட்டை நுழைவு வாயிலின் இருபுறமும் பொதுமக்களும், மக்கான் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்களின் கழிவுகளும் அகழியில் கொட்டப்பட்டு அகழி கழிவுநீராக மாறியது. இச்சூழலில் அகழியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீன்கள் செத்து மிதந்தன. இதைப்பார்த்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திடீரென அகழியில் மீன்கள் இறந்து கிடப்பதற்கு அகழியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளுடன் சேர்ந்து, ரசாயன கழிவுகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் கலப்பதால் மீன்கள் இறந்து இருக்கலாம் என்று புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போதே தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. ஆனால் தொடர்புடைய தொல்லியல்துறையும் சரி, மாநகராட்சியும் சரி அகழியில் சேர்ந்த குப்பைகளையும், செத்துமிதந்த மீன்களையும் அகற்றவில்லை.

இந்த நிலையில் ஏற்கனவே செத்து மிதந்த மீன்களுடன் நேற்று மேலும் அதிகளவிலான மீன்கள் செத்து மிதந்து பெங்களூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் துர்நாற்றத்தின் பிடியில் சிக்க வைத்துள்ளது. மேலும் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. அதேபோல், இங்குள்ள செத்து மிதக்கும் மீன்களை நாரை, ெகாக்கு ஆகிய பறவைகள் சாப்பிடுகின்றன. இதனால், பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் வனத்துறையினர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கோட்டை அகழியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டும். மேலும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: