ஜோலார்பேட்டையில் அதிகாலை சோதனை: ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் இன்று அதிகாலை நடந்த சோதனையில் ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை ரயில்வே சிறப்பு தனிப்படை பிரிவினர் பறிமுதல் செய்தனர். பெங்களூரு-சென்னை மார்க்கமாக ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீசார் தினசரி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நேற்றிரவு முதல் விடியவிடிய ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலைய சிறப்பு தனிப்படை பிரிவினர் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அனைத்து ரயில்களையும் கண்காணித்துக்கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சி வரை செல்லும் அகல்யா நகரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது அந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு பை இருந்தது. இதனால் சந்கேமடைந்த ரயில்வே போலீசார், அந்த பையை திறந்து பார்த்தனர். அதில் 10 பண்டல்களில், சுமார் 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது  தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து கஞ்சா கடத்திய நபர்களை தேடிவருகின்றனர்.

Related Stories: