கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா பூசாரியிடம் தாலி கட்டிக் கொண்டு கும்மியடித்து ஆடிப்பாடிய திருநங்கைகள்

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டு கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

18 நாள் சித்திரை திருவிழா கடந்த 5ம்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.  இதனைத் தொடர்ந்து தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவுகளும், சாமி வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டு பயபக்தியுடன் கூத்தாண்டவருக்கு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.  இதனைதொடர்ந்து கோயில் அருகில் திரண்ட திருநங்கைகள் கூத்தாண்டவர் பெருமைகளைக் கூறி கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இது மட்டுமின்றி தங்கள் வேண்டுதல் நிறைவேற உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பக்தர்கள்,  பொதுமக்கள் கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக் கொண்டு வழிபட்டனர்.  இரண்டு வருடத்துக்கு பிறகு நடைபெற்ற இந்த கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவில் மகிழ்ச்சியுடன் திரண்ட திருநங்கைகள் கோயில் அருகில் மலைபோல் கற்பூரம் ஏற்றி கூத்தாண்டவரின் பெருமைகள் குறித்த பாடல்களை பாடி மகிழ்ச்சியுடன் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இரண்டு வருடங்களாக திருவிழா நடைபெறாததால் சில திருநங்கைகள் நேற்று நடைபெற்ற விழாவில் 3 தாலிகளை கட்டிக்கொண்டும் வழிபட்டனர்.

தொடர்ந்து இன்று காலை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை விடையாத்தி நிகழ்ச்சியும், 22ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் செய்திருந்தனர். கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி அங்கு டிஐஜி பாண்டியன் மேற்பார்வையில் கள்ளக்குறிச்சி எஸ்பி செல்வக்குமார் தலைமையில்  1400 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: