கெர்சன், கிரிமியா நகரங்களை தவிர உக்ரைன் முழுவதும் வான்வழி ‘ரெட் அலர்ட்’..! ரஷ்யப் படைகளின் தீவிர தாக்குதலால் முன்னெச்சரிக்கை

கீவ்: ரஷ்யப் படைகளின் தீவிர தாக்குதலால் கெர்சன், கிரிமியா நகரங்களை தவிர உக்ரைன் நாடு முழுவதும் வான்வழி ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் இப்போது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ராணுவம் மரியுபோலில் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறது. இர்பினில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. லிவிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யாவின் தீவிர தாக்குதல்களுக்கு மத்தியில் உக்ரைனின் கெர்சன் மற்றும் கிரிமியாவைத் தவிர உக்ரைனின் மற்ற வான்வழி பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை உக்ரைன் அறிவித்துள்ளது.

ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கிரிமியா மற்றும் ரோஸ்டோவ்  ஒப்லாஸ்ட்டின் எல்லையில் கூடுதல் படைகளை ரஷ்யா நிறுத்தி உள்ளது. உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும்  பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் டானிலோவ் கூறுகையில், ‘இன்று காலை டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய இடங்களில் உள்ள எங்கள்  பாதுகாப்பு படைகளை தாக்க ரஷ்யப் படைகள் முயன்றன. கீவ்வின்  வடமேற்கில் உள்ள இர்பின் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 269 பொதுமக்கள்  கொல்லப்பட்டனர். இர்பின் நகரம் ரஷ்ய ராணுவத்தால்  கைப்பற்றப்பட்டது’ என்றார். இதற்கிடையே ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின்  தூரத்து உறவினரான இலியா நவல்னி என்பவர், கீவ் பகுதியில் உள்ள புச்சாவில்  சுட்டுக் கொல்லப்பட்டார். உக்ரைன் ஊடகங்களின் தகவல்படி, ரஷ்யப் படைகள் மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் ஆலை மீது  தொடர்ந்து குண்டுவீசி வருகிறது.

இந்த ஆலையில் ஆயிரக்கணக்கான பெண்கள்  மற்றும் குழந்தைகள் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்ய ராணுவம் மொத்தம் 155 பேரை பணயக்கைதிகளாக  பிடித்து வைத்திருந்தது. இதில் 86 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். போருக்கு மத்தியில் கீவ்வில் இயல்பு வாழ்க்கை மெதுவாகத்  திரும்பி வருகிறது. தலைநகர் கீவில் பல வெளிநாட்டு தூதரகங்கள் செயல்படத்  தொடங்கியுள்ளன. இதுகுறித்து உக்ரைன் அதிபர்  ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோ பதிவில், ‘டான்பாஸை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. எத்தனை ரஷ்ய ராணுவ வீரர்கள் அங்கு தாக்குதல் நடத்தினாலும், எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். தொடர்ந்து நாங்கள் போராடுவோம். உக்ரைனை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்றார்.

Related Stories: