அமித்ஷா 24ல் புதுச்சேரி வருகை; புதுவை அரசு அதிகாரிகளுடன் சப்-கலெக்டர் ஆலோசனை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாகிறது

புதுச்சேரி: புதுச்சேரிக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு சப்- கலெக்டர் தலைமையில் 22 அரசு துறைகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. புதுச்சேரிக்கு ஒருநாள் அரசு முறை பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 24ம்தேதி வருகிறார். கம்பன் கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.70 கோடி மதிப்பீட்டில் இசிஆரில் புதிய பஸ் நிலையம், குமரகுரு பள்ளத்தில் குடியிருப்பு வளாகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அரும்பார்த்தபுரம் பை-பாஸ் புறவழிச் சாலை திட்டம் துவங்கி வைக்கிறார். இதன் பின்னர் இந்திராகாந்தி சதுக்கம் அருகிலுள்ள புதுவை பாஜக கட்சி அலுவலகத்துக்கு செல்லும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கட்சி எம்எல்ஏக்கள், அணைத்து அணி நிர்வாகிகள், முக்கிய ெபாறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இணையும் விழாவும் நடக்கிறது. முன்னதாக அரவிந்தர் சொசைட்டி சார்பில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடக்கும் 150வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார்.

உள்துறை அமைச்சர் வருகையையொட்டி  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே ஒன்றிய உள்துறை அமைச்சரின் வருகையொட்டி பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கம்பன் கலையரங்களில் நடைபெற்ற கூட்டத்திற்கு சப்-கலெக்டர் ரிஷிதா குப்தா தலைமை தாங்கினார். சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்பி தீபிகா முன்னிலை வகித்தார்.

இதில் காவல்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, தீயணைப்புத்துறை, சுகாதாரம் உள்ளிட்ட 22 துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் பங்கேற்கும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டு இதற்கான மாநில அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

Related Stories: