கர்நாடகாவில் லஞ்சம், ஊழல் பெருகி விட்டதாக மடாதிபதி புகார்: லிங்காயத் மடாதிபதி புகாரால் பாஜக அரசுக்கு நெருக்கடி..!

டெல்லி: 30% கமிஷன் கொடுத்தால் மட்டுமே மடங்களுக்கு நிதி கிடைப்பதாகவும், கர்நாடகாவில் லஞ்சம் ஊழல் பெருகி விட்டதாக லிங்காயத் சமுதாயத்தின் மடாதிபதி கர்நாடக பாஜக அரசு மீது குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய லிங்காயத் மடாதிபதி லிங்கேஸ்வரர்; கர்நாடக மாநிலத்தில் மடங்களுக்கு நிதி ஒதுக்கும் போது 30% கமிஷன் கொடுத்தால் மட்டுமே நிதி கிடைப்பதாக கூறியுள்ளார். அதிகாரிகள் நிதி ஒதுக்கீடு செய்யும் போது 30% கமிஷன் கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு நிதி கிடைக்கும் என்று நேரடியாக கூறுகின்றனர் என தெரிவித்தார்.

கர்நாடகத்தில் எந்த அளவு லஞ்சம், ஊழல் அதிகரித்திருப்பது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்று லிங்கேஸ்வரர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரர் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த பிரச்சனையில் ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதே போல கர்நாடக மாநிலம் முழுவதும் அனைத்து ஒப்பந்தங்களும் 40% கமிஷன் அடிப்படையில் ஒதுக்கப்படுவதாக அம்மாநில ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு சங்கத்தினரும் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் லிங்காயத் மடாதிபதி ஒருவரும் ஊழல் குற்றச்சாட்டை கூறியிருப்பது கர்நாடக பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

குற்றச்சாட்டு பற்றி பதிலளித்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை; மடாதிபதி ஆதாரங்களை வழங்கினால் உரிய நடவடிக்கை எடுக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: