மேற்குவங்க பாஜகவுக்கு நோய் பிடித்திருக்கு! சொந்த கட்சியின் எம்பி தடாலடி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடந்த ஒரு எம்பி, ஒரு எம்எல்ஏ தொகுதி தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. இதுகுறித்து அக்கட்சியின் எம்பி சவுமித்ரா கான் கூறுகையில், ‘மேற்குவங்க பாஜக மாநிலத் தலைமை நோயினால் அவதிப்பட்டு வருகிறது. மாநில தலைமைக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாநில பாஜகவைக் காப்பாற்ற கட்சியில் உள்விவகாரங்களைச் சரிசெய்ய வேண்டும். அரசியல் ரீதியாக மேற்குவங்க பாஜக முதிர்ச்சியடைவில்லை. மாநிலத்தில் பாஜக வெற்றப் பெற வேண்டுமானால் செயலற்ற நிலையில் உள்ள தலைவர்களை வெளியேற்ற வேண்டும்’ என்றார்.

அதேபோல் ஜல்பைகுரி மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் அலோக் சக்ரவர்த்தி கூறுகையில், ‘உண்மையான தலைவர்கள் இல்லாமல் கட்சி செயல்பட முடியாது. திறமையான தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். மண்டல தலைவர்களை மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றார். முன்னதாக, முர்ஷிதாபாத் பாஜக எம்எல்ஏ கவுரிசங்கர் கோஷ் மற்றும் பஹரம்பூர் எம்எல்ஏ சுப்ரதா மொய்த்ரா ஆகியோர் மாநிலத் தலைமையுடனான கருத்து வேறுபாடு காரணமாக மாநிலக் குழுவில் இருந்து ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: