திருவேற்காட்டில் காயலான் கடை குடோனில் குட்கா பதுக்கி விற்றவர் கைது: 200 கிலோ பறிமுதல்; உரிமையாளர் கைது

பூந்தமல்லி: திருவேற்காட்டில் காயலான் கடை குடோனில் குட்கா பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டார். குடோனில் இருந்து 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் திருவேற்காடு பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக ஆவடி போதை தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் இன்று அதிகாலை 2 மணியளவில் திருவேற்காடு திருவேங்கடம் நகர் பகுதியில் உள்ள ஒரு இரும்பு குடோனில் சோதனை செய்தனர். அங்கு, மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை பிரித்து பார்த்தபோது குட்கா பொருட்கள் இருந்தது. மொத்தம் 200 கிலோ. அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருவேங்கடம் நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (48) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அவர் அப்பகுதியில் காயலான் கடை நடத்தி வந்துள்ளார். பழைய இரும்பு பொருட்களை வாங்கி சேமித்து வைப்பதற்காக தனியாக இரும்பு குடோன் அமைத்துள்ளார். அதற்குள் குட்காவை மறைத்து வைத்து திருவேற்காடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: