ராம நவமி, அனுமன் ஜெயந்தி கலவரம் குறித்து என்ஐஏ விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுடெல்லி: ‘ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி பண்டிகைகளின் போது நடந்த கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’ என தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவின் போது, டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதே போல சமீபத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின் போதும் வன்முறைகள் ஏற்பட்டன. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் கடிதம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘மத ரீதியாக நாடு முழுவதும் பல்வேறு கலவரம், வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டெல்லி, ராஜஸ்தான், மேற்குவங்கம், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இதுபோன்ற செயல்பாடுகள் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக கடந்த வாரம் ராம நவமி கொண்டாடிய போது டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழத்தில் இரு தரப்பினரிடையே நடந்த கலவரத்தில் பல மாணவர்கள் படுகாயமைடைந்தனர். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்பாட்டால் இந்துக்கள் தான் அதிகம் பாதிப்படைகின்றனர். எனவே இந்த விவகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

நாடு முழுவதும் இத்தகைய தாக்குதல் நடந்து வருவதால் இதன் பின்னணி யில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டு அதனை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும். அதேப்போன்று சிறப்பு கண்காணிப்பு குழுவையும் நியமிக்க வேண்டும். இந்த விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் என்பதால் அவசரமாக விசாரித்து ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். இதேப்போன்று வன்முறையில் ஈடுபட்டதாக கூறி வீடுகள் மற்றும் கடைகள் மீது புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டதற்கு எதிராக ஜமாய் உலாமா இ ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

23 பேர் கைது:  டெல்லி ஜஹாங்கிர்புரி அனுமன் ஜெயந்தி கலவரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா கூறுகையில், ‘‘இதுவரை இச்சம்பவம் தொடர்பாக இரு பிரிவைச் சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைக்கு பிறகு தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அமைதியை சீர்குலைக்க நினைக்கும் யாராக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் கடுமையான தண்டனையுடன் கூடிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வன்முறை நடந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் வீடியோ ஆகியவற்றை அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் வன்முறை நடந்த இடத்தில் குற்றப்பிரிவு காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.

Related Stories: