குற்றாலம் செண்பகாதேவி கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா தீர்த்தவாரி

தென்காசி: குற்றாலம் மலை மீது அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில், 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சித்ரா பவுர்ணமி திருவிழாவில் நேற்று அருவிக்கரையில் தீர்த்தவாரி நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அகஸ்தியர் அமர்ந்த புண்ணிய மலையான குற்றாலம் மலையில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரை மாதம் பவுர்ணமி திருவிழா, கடந்த 7ம் தேதி காலையில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், மதியம் உச்சிக்கால பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். பெண்கள், அவ்வையார் அம்மனுக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர். இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகள், வில்லிசை, நள்ளிரவில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.

நேற்று காலையில் தீர்த்தவாரியை முன்னிட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. செண்பகாதேவி உற்சவர் அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு செண்பகாதேவி அருவிக்கரை அருகிலுள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் உள்ள அகஸ்தியர் பாதத்தில் வைக்கப்பட்டு, அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் செண்பகாதேவி அருவியில் அம்மனை வைத்து சந்தனம், பன்னீர், குங்குமம் மற்றும் மலர்களால் மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்றது.

அப்போது அருவி தடாகத்தில் உள்ள தண்ணீரில் மஞ்சள் கலந்து மஞ்சள் நீராக காட்சியளித்தது. தொடர்ந்து அம்மன் வீதியுலா, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துதிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன், குற்றாலம் வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன், வனவர் பிரகாஷ் தலைமையிலான வனத்துறையினர் செய்திருந்தனர்.

Related Stories: