காதலனை திருமணம் செய்வதற்காக மூதாட்டியை கொன்று நகை கொள்ளை: பிளஸ் 2 மாணவி கைது

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலக்காடு ரோடு மாரியப்பன் வீதியை  சேர்ந்தவர் நாகலட்சுமி (78). இவருக்கு ஒரு மகனும், 3  மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. கணவர் சதாசிவம் இறந்துவிட்டதால் மகன் செந்தில்வேலுவுடன் நாகலட்சுமி வசித்து வந்தார். நேற்று முன்தினம் பகல் 11 மணி அளவில் தாயை  பார்க்க மகள் சாந்தமீனா வந்தபோது, வீட்டிற்குள் நாகலட்சுமி இறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். தகவலின்படி மேற்கு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டி கொலை செய்யப்பட்டதும், அவர் அணிந்திருந்த 20 பவுன் நகை மாயமாகி இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் அதே வீதியில் வசிக்கும் 17 வயதான அரசு பள்ளி பிளஸ் 2 மாணவி ஒருவர் அவ்வப்போது நாகலட்சுமியை சந்தித்து பேசி சென்றது தெரியவந்தது. அந்த மாணவியை பிடித்து போலீசார் விசாரித்தபோது, மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மாணவியை போலீசார் கைது செய்தனர். மாணவி கொடுத்த வாக்குமூலத்தில், வாலிபர் ஒருவரை  காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்வதற்காக பணம், நகை சேகரிக்க திட்டமிட்டதாகவும், சித்ரா பவுர்ணமியான நேற்று முன்தினம் கோயிலுக்கு செல்வதற்காக நாகலட்சுமி நகைகள் அணிந்திருந்ததை பார்த்ததால், வீட்டில் தனியாக இருந்த அவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டு நகையை கொள்ளையடித்து சென்றதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை, கொள்ளையில் மாணவியின் காதலனுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: