திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா தொடங்கியது

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் நித்ய கல்யாண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆதிவராகப் பெருமாள், தமது இடது தொடையில், அகிலவல்லி தாயாரை அமர்த்தியும், இடது திருவடியை தம்பதியாய் இருக்கும் ஆதிஷேசன், வாசுகி மீதும், மற்றொரு திருவடியை பூமாதேவியாதி நிலத்தில் ஊன்றியும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு, காலவ முனிவரின், 360 மகள்களை, தினம் ஒரு மகன் வீதம், 360 பெண்களையும் மணம் புந்து கொள்வதால் நித்ய கல்யாண பெருமாள் என பெயர் பெற்றார். திருமணமாகாதவர் இக்கோயிலுக்கு வந்து வேண்டி மாலை போட்டுக் கொண்டு சுவாமியை சுற்றி ஒன்பது சுற்றுகள் வலம் வந்தால் தடை நீங்கி, திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

அசுர, குலகாலநல்லூர் வராகபுரி, புரி, நித்யகல்யாணபுரி என்கிற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இவ்வூர் எம்பெருமான் பிராட்டியை இடது பக்கத்தில் வைத்திருப்பதால் திரு எடந்தை எனப் பெற்றது. இது நாளடைவில், மறுவி திருவிடந்தை எனப் பெயர் மாறியது. இக்கோயிலில்,  சித்திரை மாத பிரமோற்சவ விழா நேற்று காலை 6 - 7 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த, விழா வரும் 25ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று அன்ன வாகன சேவை நடந்தது. இந்து, அறநிலையத் துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் இரா.வான்மதி, இந்து அறநிலையத் துறை செங்கல்பட்டு உதவி ஆணையர் லக்ஷ்மி காந்த பாரதி ஆகியோர் வழிகாட்டுதல்படி, கோயில் செயல் அலுவலர் ஆ.குமரன், தக்கார் ஆ.முத்துரெத்தினவேலு ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.  

தொடர்ந்து, 17ம் தேதி சிம்ம வாகன சேவை, 18ம் தேதி சிறிய திருவடி சேவை, 19 ம் தேதி சேஷ வாகன சேவை, புன்னைய டி சேவை, 20ம் தேதி கருட சேவை, 21ம் தேதி யானை வாகன சேவை, 22ம் தேதி திருத்தேர் வீதி உலா, 23ம் தேதி பல்லக்கு வெண்ணெய்த் தாழி, கண்ணன் சேவை, 24ம் தேதி சந்திர பிரபை, 25ம் தேதி தெப்ப உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

Related Stories: