அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் மோதல் பாஜ-விசிகவினர் 250 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாஜவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பை சேர்ந்த 250 பேர் மீது கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னை கோயம்பேடு மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு கடந்த 14ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி மாலை அணிவிக்க வந்தார். அவர் மாலை அணிவித்து விட்டு கீழே இறங்கிவந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில், பாஜ ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கட்சியினருடன் வருகை தந்தார். அவரை வரவேற்று பாஜவினரும் கொடி கம்பங்களை நட்டிருந்தனர். அப்போது பாஜ கொடி கம்பம் சாய்ந்தது தொடர்பாக, திடீரென இரண்டு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, திருமாவளவன் அங்கிருந்து காரில் சென்றுவிட்டார்.

இதன்பிறகு இரண்டு தரப்பினரும் கற்களை வீசியும், கைகளால் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில், போலீஸ்காரர் தர்மராஜ், பாஜ பிரமுகர்கள் அரிகிருஷ்ணன், செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் குமார், ரவி ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.இதுபற்றி  போலீசில் இரண்டு தரப்பினரும் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், பாஜவினர் 100 பேர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 150 பேர் மீது 6 பிரிவின் கீழ் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: