மதவெறியை தூண்டுபவர்களை தண்டிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: சோனியா, மு.க.ஸ்டாலின் உள்பட 13 தலைவர்கள் கூட்டறிக்கை

புதுடெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் சமீபத்தில் வெடித்த வகுப்புவாத வன்முறையை வன்மையாகக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘மதவெறியைத் தூண்டுபவர்களைத் தண்டிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது’ என கவலை தெரிவித்துள்ளனர்.சமீபகாலமாக நாட்டின் பல பகுதிகளிலும் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ராம ரவமி கொண்டாட்டத்தின் போது, வட மாநிலங்களில் பல பகுதிகளிலும் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், வகுப்புவாத வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:உணவு, உடை, நம்பிக்கை, பண்டிகைகள் மற்றும் மொழியை பயன்படுத்தி ஆளும் அமைப்பின் சில பிரிவுகள், நமது சமூகத்தை பிளவுபடுத்தும்விதத்தால் நாங்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம்.  அதிகார வர்க்கத்தின் ஆதரவைப் பெற்றவர்களாகத் தோன்றும் அப்பிரிவினரால் நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பூட்டும் சம்பவங்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. வெறுப்பு மற்றும் தவறான எண்ணத்தை பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் விதமும் கவலை தருகின்றன.

மத ஊர்வலங்களுக்கு முன்பாக வெறுப்பு பேச்சுகள் மூலம் இனவாத வன்முறையைக் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மக்களை பிரித்தாளும் அப்படிப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதுபோல், நாட்டின் பல மாநிலங்களில் சமீபத்தில் வெடித்த வகுப்புவாத வன்முறையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் ஒரு மோசமான நிலை உருவாகி இருப்பதை அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறோம்.

அதே சமயம், வார்த்தைகளாலும், செயலாலும் நம் சமூகத்தில் மதவெறியை தூண்டிவிடுபவர்களுக்கு எதிராக பேசத் தவறிய பிரதமரின் மவுனம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆயுதமேந்திய வகுப்புவாத வன்முறை கும்பல், அதிகாரத்தில் இருப்பவர்களும் அமோக ஆதரவை பெற்றது என்பதற்கு இந்த மவுனமே ஒரு தெளிவான சாட்சி. இந்த சமயத்தில், பல நூற்றாண்டுகளாக இந்தியாவை வரையறுத்து வளப்படுத்திய சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்ற எங்கள் கூட்டு உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறோம். நமது சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் நச்சு சித்தாந்தங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், எதிர்கொள்வதற்கும் நாங்கள் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் அமைதி காக்க வேண்டும்

கூட்டறிக்கையில் மேலும், ‘நமது நாடு அதன் பன்முகத்தன்மையை முழு அளவில் மதித்து, கொண்டாட்டங்களை நடத்தினால் மட்டுமே அது செழிக்கும் என்பதை வலியுறுத்துகிறோம். நம்மை பிரித்தாள விரும்புவோரின் தீய நோக்கத்தை முறியடித்து அமைதி காக்குமாறு அனைத்து தரப்பு மக்களையும் கேட்டுக் கொள்கிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு சுதந்திரமாகவும் கூட்டாகவும் பணியாற்றுமாறு நாடு முழுவதும் உள்ள எங்கள் கட்சிப் பிரிவுகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்,’ என்றும் 13 தலைவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: