இலங்கையில் 8வது நாளாக மக்கள் தொடர் போராட்டம்: போராட்டக்களத்தில் களமிறங்கிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயசூர்யா

கொழும்பு: இலங்கையில் 8வது நாளாக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயசூர்யாவும் கலந்து கொண்டார். போராட்டம் நடத்த வேண்டாம் எனக்கூறி அமைச்சர் கண்ணீர் விட்டு கேட்டுக் கொண்டார்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய தலைமையிலான அரசுக்கு எதிராக இன்றுடன் 8வது நாளாக கொழும்பில் உள்ள காலி முகத்திடல் என்ற இடத்தில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவும் நேற்றைய போராட்டத்தில் மக்களோடு மக்களாக களம் இறங்கினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சனத் ஜெயசூர்யாவை தூக்கிப்பிடித்து உற்சாகத்துடன் போராட்டக் குரல் எழுப்பினர். சோர்வின்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை அவர் பாராட்டினார்.

இதற்கிடையே இடைக்கால விவசாய துறை அமைச்சர் சாந்த பண்டாரவின் வீட்டிற்கு முன்பாக மக்கள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மக்கள் என் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம். தொடர் போராட்டம் காரணமாக வீட்டில் உள்ள எனது மகள் அச்சத்துடன் உள்ளார். அவர் உணவு எதுவும் எடுத்துக் கொள்ள மறுக்கிறார். ஒரே பயத்தில் தூங்க மறுக்கிறார். எனவே எனது வீட்டின் முன் போராட்டம் நடத்த வேண்டாம்’ என்று கண்ணீருடன் கூறினார்.

ஆளுங்கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியில் இருந்த நிலையில், தற்போதைய நெருக்கடியால் கூட்டணியில் இருந்து விலகியது. இருந்தும் இடைக்கால அமைச்சரவையில் மேற்கண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்பியான சாந்த பண்டார, விவசாய துறை அமைச்சராக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.      

Related Stories: