வந்தவாசி வெண்குன்றம் மலையில் தீ வைப்பு அரியவகை செடி, கொடிகள் எரிந்து நாசம்-சமூக விரோதிகள் தொடர்ந்து அட்டூழியம்

வந்தவாசி :  வந்தவாசி வெண்குன்றம் மலையில் சமூக விரோதிகள் வைத்த தீயால் அரியவகை செடி, கொடிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமானது.வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலை மீது ஈஸ்வரர், விநாயகர் கோயில் உள்ளது. இந்த மலை மீது ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழாவன்று தீபம் ஏற்றுவது வழக்கம். மேலும், சுவாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதேபோல், பவர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வதும் வழக்கம்.

சுமார் 1,600 அடி உயரமுள்ள இந்த மலையில் அரியவகை மூலிகை செடி, கொடிகள் மற்றும் மரங்கள் உள்ளன. இதனால் சித்த வைத்தியர்கள் இங்குள்ள மூலிகை செடியை பயன்படுத்தி வைத்தியம் செய்து வருகின்றனர். இந்த மலையடிவாரத்தில் நேற்று இரவு மர்ம ஆசாமிகள் தீ வைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து, தீ மளமளவென பற்றி எரிந்து, பாதி மலை வரை கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த வந்தவாசி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, தண்ணீர் எட்டும் தூரம் வரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். ஆனாலும், பாதி மலை வரை தீ பற்றி எரிந்ததால் அதனை அணைக்க முடியாமல் போனது. இதனால் தீயணைப்பு துறையினர் திணறும் நிலை ஏற்பட்டது. இந்த தீயில் அங்கிருந்த அரிய வகை செடி, கொடிகள் மற்றும் மரங்கள் எரிந்து சாம்பலானது. கடந்த 10  நாட்களுக்கு முன்பு இதே மலையில்  மர்ம ஆசாமிகள் தீ வைத்து சென்றனர். இதுபோன்று தொடர்ந்து மலையில் தீ வைக்கும் சமூக விரோதிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: