ஆத்தூர் அரசு பள்ளியில் வகுப்பறை, மாடிப்படியை சுத்தம் செய்யும் மாணவிகள்-அதிகாரிகளுக்கு பெற்றோர் புகார்

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரின் கடைகோடியில் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆத்தூர், நரசிங்கபுரம், முள்ளுவாடி மற்று்ம கல்லாநத்தம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர்களில் சிலர் வகுப்பறைகளையும், மாடிப்படிகளையும் தூய்மைப்படுத்தும் பணியில் தினந்தோறும் மாணவிகளை ஈடுபடுத்தி வருவதாக பெற்றொர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால், தேர்வு நேரத்தில் மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்னறர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு பள்ளிகளில் நல்ல முறையில் கற்பித்தல் இருப்பதால்தான் தனியார் பள்ளியில்  படித்தவர்களை கட்டாயப்படுத்தி அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்கிறோம். தேர்வுகள் துவங்கும் நிலையில் மாணவிகளை படிக்க வைக்காமல் ஆசிரியைகள் பள்ளி வளாகத்தினை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்துவதாக தினசரி எங்களிடம் வந்து சொல்கிறார்கள்.

இதுகுறித்து தலைமையாசிரியரிடம் புகார்  தெரிவிக்க சென்றால் அவர் கண்டுகொள்வதே இல்லை என்றனர். பள்ளி தூய்மை பணிக்கு மாணவிகளை பயன்படுத்தி வருவது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளதாக பெற்றோர் கூறினர். அரசு பள்ளிகளில் தூய்மை பணிக்கு என தனியாக ஆட்கள் நியமிக்கப்படாததே இந்த அவல நிலைக்கு காரணம் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: