கடலூர் அருகே பரபரப்பு; ஊருக்குள் சிங்கம்?.. பொதுமக்கள் பீதி

கடலூர்: கடலூர் அருகே உள்ள மாவடிபாளையம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நேற்றிரவு, இப்பகுதியில் உள்ள விளை நிலத்துக்குள், ஒரு சிங்கம் புகுந்ததாக தகவல் பரவியது. மேலும் இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்தனர். மேலும் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள், அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று, விளை நிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பகுதியில் சிங்கம் எதுவும் தென்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் சமூக வலைதளங்களில் வீடியோவை சோதனை செய்ததில், அந்த வீடியோ கடந்தாண்டு மார்ச் மாதம் இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிங்கம் புகுந்த வீடியோ என்பது தெரியவந்தது.

அந்த வீடியோவை மாவடிபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் போலியாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டது தெரியவந்தது. அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சிங்கம் ஊருக்குள் புகுந்த செய்தி வதந்தி என்பதை அறிந்த பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Related Stories: