முறையாக குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்: அந்தியூர் அருகே பரபரப்பு

அந்தியூர்: அந்தியூர் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் இன்று திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஊராட்சி. இங்குள்ள கிருஷ்ணாபுரம் பகுதிக்கு கடந்த 15 நாட்களாக குடிநீரும், போர்வெல் தண்ணீரும் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை 8 மணி அளவில் காலி குடங்களுடன் திரண்டு, அந்தியூர்-பர்கூர் பிரதான சாலை, தண்ணீர்பந்தல் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அந்தியூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், மறியல் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வந்து பொதுமக்களை சமரசம் செய்தார். உடனடியாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து காலை 10 மணி அளவில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மறியல் காரணமாக அந்தியூரில் இருந்து மூலக்கடை, வரட்டுப்பள்ளம், செல்லம்பாளையம், பர்கூர் மலைப்பகுதி செல்லும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்தியூர் குருநாதசாமி வனக்கோயில் ரோடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

Related Stories: