சொத்து வரி உயர்வால் குடிநீர் வரி உயரும்: ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: சொத்து வரி உயர்வு அறிவிப்பு, குடிநீர் வரி உயர்வுக்கு தானாகவே வழிவகுக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 100 விழுக்காடும், வணிக நிறுவனங்களுக்கு 150 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் வரி என்பது மாநகராட்சியின் ஆண்டு மதிப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதால், அரசின் சொத்து வரி உயர்வு அறிவிப்பு குடிநீர் வரி உயர்வுக்கு தானாகவே வழிவகுக்கும்.

இந்த வரி உயர்வின் மூலம் சொந்த வீடுகளை வைத்திருப்போர் மட்டுமல்லாமல் வாடகைக்கு குடியிருப்போரும் பாதிக்கப்படுவர். சொந்தக் கட்டடங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள், அந்தக் கட்டடங்களில் வாடகைக்கு குடியிருக்கும் ஏழை, எளியோரின் வாடகையினை உயர்த்தக்கூடிய நிலை ஏற்படும். இதேபோல், மாத வாடகை அடிப்படையில் கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவோரும் கூடுதல் சுமைக்கு ஆளாவதோடு, கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையும், தொழிற்சாகைளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும், பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டணமும் வெகுவாக உயரும். இதனால் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர். எனவே, சொத்து வரி உயர்வினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், இதனை எதிர்த்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் நடத்தும்.

Related Stories: