திருப்பத்தூர் அருகே மலைக்குன்றில் விபத்து; 11 பேர் சடலங்கள் ஒரே இடத்தில் அடக்கம்: கிராம மக்கள் விடியவிடிய கதறல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மலைக்குன்றில் வேன் உருண்டு விழுந்த விபத்தில் 11 பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து 11 சடலங்களும் நள்ளிரவு ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சடலங்களை பார்த்து கிராம மக்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர், நேற்று தெலுங்கு வருட பிறப்பையொட்டி சேம்பரை என்ற குன்று பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சரக்கு வேனில் சென்றனர்.

வேனை அதே கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் (40) என்பவர் ஓட்டினார். மிக குறுகலான வளைவில் சென்று கொண்டிருந்த சரக்கு வேன், மதியம் 1 மணியளவில் திடீரென நிலைதடுமாறியது. இதை கட்டுப்படுத்த டிரைவர் முயன்றும் முடியாத நிலையில் பின்னோக்கி சென்று பக்கவாட்டில் உள்ள 50 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த கோர விபத்தில் 11 பேர் பலியாயினர். 31 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 24 பேர் திருப்பத்தூர் மருத்துவமனையிலும் 7 பேர் தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த 11 பேரின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்து நேற்றிரவு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது சடலங்கள் நள்ளிரவு ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சடலங்களை பார்த்து கிராம மக்கள் விடிய விடிய கதறி அழுதது பெரும் சோகத்ைத ஏற்படுத்தியது.இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ₹50 ஆயிரமும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்எல்ஏக்கள் தேவராஜ், நல்லதம்பி ஆகியோர் இன்று காலை புலியூர் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினர்.

Related Stories: