டேனியலி அதிரடி சதத்தால் பைனலுக்கு முன்னேறிய இங்கிலாந்து: தெ.ஆப்ரிக்கா ஆட்டம் முடிந்தது

கிறைஸ்ட் சர்ச்: நியூசிலாந்தில் நடக்கும் 12வது ஐசிசி மகளிர் உலக கோப்பை 2வது அரையிறுதியில் நேற்று தென் ஆப்ரிக்கா- இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின. கிறைஸ்ட் சர்ச்சில் நடந்த இந்த பகல்/இரவு ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட இங்கிலாந்தின் வீராங்கனைகள் அடுத்தடுத்து வெளியேற டேனியலி பொறுப்புடன் விளையாடினர். அவருடன் சிறிது நேரம் களத்தில் இருந்த ஆமி 28 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஷோபியா சிறப்பாக ஒத்துழைக்க டேனியலி அதிரடியாக விளையாடி சதத்தை கடந்தார். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 116ரன் குவித்தனர். டேனியலி 129ரன்னில் ஆட்டமிழந்தார். அரைசதம் விளாசிய ஷோபியாவும் 60ரன்னில் வெளியேறினார்.

கடைசி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய ஷோபி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அதனால் இங்கிலாந்து 50ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 293ரன் குவித்தது. தெ.ஆப்ரிக்கா அணியின் ஷப்னிம் 3, காப், கிளாஸ் தலா 2, காகா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து 294ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  விளையாடத் தொடங்கிய தெ.ஆப்ரிக்க அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அதே நிலைமை தொடர அந்த அணி 38ஓவரில் 156ரன்னுக்கு சுருண்டது. அதனால் இங்கிலாந்து 137ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தெ.ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக மிக்நன் 30, லாரா 28, கேப்டன் சூனே, காப், திரிஷா செட்டி ஆகியோர் தலா 21ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஷோபி 6 விக்கெட்களை அள்ளினார். அன்யா 2விக்கெட் எடுத்தார். டேனியலி ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம்  இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய  இங்கிலாந்து,  8வது முறையாக முதல் 2 இடங்களை பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து ஏற்கனவே 4முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஏப்.3ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா உடன் மோதுகிறது.

* எப்போதும் அரையிறுதி

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் ஆடவர், மகளிர் அணி என எந்த சீனியர் அணியும் டி20, ஓருநாள், டெஸ்ட் உலக கோப்பைகளில் இதுவரை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதில்லை. அரையிறுதியுடன் வெளியேறும் அந்த வரலாறு நேற்றும் தொடர்ந்தது.

Related Stories: