சுனில் நரைன் அதிரடி ஆட்டம் நைட் ரைடர்ஸ் முதலிடம்

லக்னோ: சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 98 ரன் வித்தியாசத்தில் வென்று முதலிடத்துக்கு முன்னேறியது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், லக்னோ டாஸ் வென்று பந்துவீசியது. கொல்கத்தா தொடக்க வீரர்களாக ஃபில் சால்ட், சுனில் நரைன் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.1 ஓவரில் 61 ரன் சேர்த்தது.

சால்ட் 32 ரன் (14 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து நரைன் – ரகுவன்ஷி இணைந்து அதிரடியை தொடர, கேகேஆர் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. நரைன் 27 பந்தில் அரை சதம் அடித்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்தனர். நரைன் 81 ரன் (39 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி வெளியேறினார். ரஸ்ஸல் 12 ரன், ரகுவன்ஷி 32 ரன், ரிங்கு சிங் 16 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஷ்ரேயாஸ் 23 ரன் (15 பந்து, 3 பவுண்டரி) விளாசி அவுட்டானார். கேகேஆர் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன் குவித்தது.

ரமன்தீப் சிங் 25 ரன் (6 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), வெங்கடேஷ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 3, ரவி பிஷ்னோய், யுத்வீர் சிங், யஷ் தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன் எடுத்து, 98 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 36 ரன் ( 21 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். கொல்கத்தா பந்துவீச்சில் ஹர்திஷ் ராணா, வருண் சக்ரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.கொல்கத்தா முதலிடத்துக்கு முன்னேறியது.

The post சுனில் நரைன் அதிரடி ஆட்டம் நைட் ரைடர்ஸ் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: