தமிழகம் முழுவதும் தொடங்கியது டீசல் விலை உயர்வு கண்டித்து ரிக் வண்டிகள் ஸ்டிரைக்: 4 ஆயிரம் வண்டிகள் ஆங்காங்கே நிறுத்தி வைப்பு

சேலம்: டீசல் விலை உயர்வை கண்டித்தும், ரிக் வண்டி தொழிலுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் 3 நாள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்டிரைக் நேற்று காலை தொடங்கியது. இதனால், தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் ரிக் வண்டிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிதாக போர்வெல் போடும் பணி அடியோடு நின்றுள்ளது. பிற மாநிலங்களுக்கு, நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்றுள்ள ரிக் வண்டிகளும் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ளன. நாளைய தினம் வரை 3 நாட்களுக்கு இந்த ஸ்டிரைக் நடக்கிறது. இப்போராட்டத்தில், புதிய டிரில்லிங் கட்டணத்தை ரிக் வண்டி உரிமையாளர்கள் கடை பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்செங்கோடு, சேலம் பனமரத்துப்பட்டி ஆகிய இடங்களில் 100க்கும் மேற்பட்ட ரிக் வண்டிகள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் லட்சுமணன் கூறுகையில், குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் போர்வெல் போட்டுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த ரிக் தொழிலுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கின்றனர். போர்வெல் அமைக்க ரூ.1 லட்சம் பில் என்றால், ரூ.18 ஆயிரத்தை ஜிஎஸ்டியாக செலுத்துகிறோம். இந்த ஜிஎஸ்டியை ரத்து செய்திட வேண்டும். அல்லது 5 சதவீத ஜிஎஸ்டியாக குறைத்திட வேண்டும். தற்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.96க்கு மேல் விற்கப்படுகிறது. ஒரு அடிக்கு ஒரு லிட்டர் டீசல் செலவாகும். ஆனால், நாங்கள் அடிக்கு ரூ.85 என்ற நிலையில் தான் கட்டணம் வசூலிக்க முடிகிறது. இதனால், நஷ்டத்தில் தான் தொழில் நடக்கிறது. எனவே டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றார்.

Related Stories: