56 படிக்கட்டுக்கள் அமைக்க பூமிபூஜை; திருத்தணி முருகன் கோயிலில் மாஸ்டர் பிளான் திட்டம்.! அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலிலுக்கு மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். திருத்தணி முருகன் கோயில் சரவண பொய்கை குளத்தில் இருந்து மலைக்கோயில் வரை ஓராண்டுகளை குறிக்கும் வகையில் 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் நடந்துசென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மலைக்கோயிலின் கிழக்கு பக்கத்தில் 9 நிலை ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராஜகோபுரத்தில் இருந்து தேர் வீதி வரை 56 புதிய படிக்கட்டுக்கள் அமைக்க 92 லட்சம் மதிப்பீட்டில் இன்று காலை பூமிபூஜை நடைபெற்றது. இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு பூமிபூஜையை துவக்கிவைத்தார்.

இதில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பரஞ்சோதி, துணை ஆணையர் ரமணி, திருத்தணி ஆர்டிஓ சத்யா, தாசில்தார் விஜயகுமார், நகர பொறுப்பாளர் வினோத்குமார், நகர துணைத் தலைவர் சாமிராஜ், ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி; திமுக இந்துவிரோத கட்சி என்று மக்களிடையே பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது.

திமுக ஆட்சியில்தான் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாத திருத்தணி முருகன் கோயில் தங்கத் தேர் தற்போது வீதியுலா வருகிறது. வெள்ளித் தேர் பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது திருத்தணி முருகன் கோயிலுக்கு மாஸ்டர் பிளான் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின்படி, குடிநீர், தங்குமிடம், கழிப்பிட வசதி, குளங்கள் சீரமைத்தல், கோயிலை சுற்றி பாதைகள் அமைக்க மாபெரும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் கிடைத்ததும் மாஸ்டர் பிளான் திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும்.தற்போது முதல்கட்டமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். இதன்பிறகு அமைச்சரிடம், திருத்தணி, அகூர், தரணிவராகபுரம், குமாரகுப்பம் பகுதிகளை சேர்ந்த மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில்,’’ விழா நாட்களில் உற்சவர் முருகன், நகர்வலம் வரும்போது எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுமைத்தாரர்களாக அரசர் காலம் தொண்டு இருந்து வருகிறோம். எங்களுக்கு அரிசி, சாதம் மற்றும் சன்மானம் வழங்கப்படுகிறது. தற்போது அது குறைவாக உள்ளதால் உயர்த்தி தரவேண்டும். மேலும் கோயிலில் எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று தெரிவித்திருந்தனர். இதுபற்றி பரிசீலனை செய்யப்படும் என்று  அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: