பாக். நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல்: வரும் 31ல் விவாதம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முறைப்படி தாக்கல் செய்யப்பட்டது. தீர்மானத்தின் மீதான விவாதம் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. ‘இம்ரான் கான் சரியாக அரசை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என அவரது கட்சியினர் உட்பட பலரும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு 161 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வரும் 31ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என்று உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத்  நிருபர்களிடம் தெரிவித்தார். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 3 முதல் 7 நாட்கள் வரை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.மொத்தம் 342 உறுப்பினர்கள் உள்ள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு 172 பேரின் ஆதரவு தேவை. இம்ரான் கான் கட்சியில் 155 உறுப்பினர்கள் உள்ளனர்.  அவர்களில் 24 பேர் இம்ரானுக்கு எதிராக வாக்களிக்கக்கூடும். கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆதரவும் இம்ரானுக்கு உள்ளது. கூட்டணி கட்சியினர் தங்கள் ஆதரவை விலக்கினால்  இம்ரான் பதவிக்கு ஆபத்து ஏற்படும். 

Related Stories: