3வது டெஸ்டில் இங்கிலாந்து சொதப்பல் தொடரை வென்றது வெ.இண்டீஸ்

கிரெனடா: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில், 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி  டி20, டெஸ்ட் தொடர்களில் விளையாடியது.  மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெ.இண்டீஸ் கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதின. முதல் 2 டெஸ்டும் டிராவில் முடிந்த நிலையில், கடைசி மற்றும் 3வது டெஸ்ட் செயின்ட் ஜார்ஜஸ், தேசிய ஸ்டேடியத்தில் நடந்தது.டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து  204 ரன்னுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 297 ரன் குவித்தது. 93 ரன் பின்தங்கிய நிலையில்  2வது இன்னிங்சை  விளையாடிய இங்கிலாந்து 120 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. லீஸ் 31, பேர்ஸ்டோ 22, வோக்ஸ் 19 ரன் எடுத்தனர். கைல் மேயர்ஸ் 5 விக்கெட் கைப்பற்றினார்.

28 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெ.இண்டீஸ், 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. கேப்டன் பிராத்வெய்ட்  20*, கேம்ப்பெல் 6* ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 100* ரன் விளாசிய ஜோஷுவா ட சில்வா ஆட்ட நாயகனாகவும்,   கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: