வாட்ஸ்அப் குழு அமைத்து கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை போதை மாத்திரை விற்பனை கும்பல் துப்பாக்கியுடன் கைது: முக்கிய குற்றவாளியை பிடிக்க டெல்லி விரைந்தது தனிப்படை

சென்னை: போதை மாத்திரை, டானிக் விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள், 2 கத்திகள், போதை மாத்திரைகள், போதை டானிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தி, போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அதிகளவில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆயிரம் விளக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், சாதாரண உடையில் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வந்தார். போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ராயப்பேட்டையை சேர்ந்த நானா (எ) தீபக்குமார் என்பதும், இவர் இரவு நேரங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தது, போதை மாத்திரைகள் எங்கிருந்து வாங்குகிறாய் என் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர் அளித்த தகவலின்படி போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக ராயப்பேட்டையை சேர்ந்த அத்னில் அலி (31), திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது ஷா மிர்கான் (38), குரோம்பேட்டையை சேர்ந்த முகமது முதர்சிங் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரின் வீடுகளிலும் நடத்திய சோதனையில், 50 அட்டை கொண்ட போதை மாத்திரைகள், போதை டானிக்குகள் மற்றும் ஏர்கன் வகையை சேர்ந்த 4 துப்பாக்கிகள், ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா, 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸ் விசாரணையில் பிடிபட்ட 3 பேரும், டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து, பார்சல் மூலம் பெற்றதாக தெரிவித்தனர். மேலும், போதை பழக்கத்திற்கு அடிமையான கல்லூரி மாணவர்கள், வாலிபர்களுடன் சேர்ந்து வாட்ஸ்அப் குழு அமைத்து போதை மாத்திரை, போதை டானிக் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. குறிப்பாக, டெல்லியில் உள்ள சச்சின் யாதவ் என்பவர் மூலம் தங்களுக்கு தேவையான போதை மாத்திரைகள் மற்றும் போதை டானிக்குகள் பார்சல் மூலம் பெற்றதாக கூறினர்.

கடந்த வாரம் கோடம்பாக்கத்தில் பட்டதாரி பெண் உட்பட 6 பேரை போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர். அவர்களும் டெல்லியில் உள்ள சச்சின் யாதவ் மூலம் தான் போதை மாத்திரைகள் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. அதேநேரம், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதோடு இல்லாமல் போதைப் பொருட்களை அனுப்பும் நபர்கள் மற்றும் தயாரிக்கும் நபர்களையும் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் டெல்லியில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகளை பெரிய அளவில் சப்ளை செய்து வரும் சச்சின் யாதவை கைது செய்ய சென்னையில் இருந்து தனிப்படை டெல்லி விரைந்துள்ளது. அந்த தனிப்படையினர் டெல்லி போலீசார் உதவியுடன் சச்சின் யாதவை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: