கணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்-மாடுகள் முட்டி 8 பேர் காயம்

அணைக்கட்டு : கணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தில் நேற்று நடந்த மாடு விடும் விழாவில் பார்வையாளர்கள் மத்தியில் காளைகள் சீறி பாய்ந்து ஓடின. விழாவில் மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தில் காளை விடும் விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், திமுக ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் செந்தில் தலைமையில், ஆர்ஐ சந்தியா, விஏஓ சுரேஷ்குமார் மற்றும் விழாக்குழுவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.தொடர்ந்து, வேலூர் ஆர்டிஓ பூங்கொடி விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற 203 மாடுகளுக்கு கால்நடை மருத்துவக்குழுவினர் உரிய பரிசோதனை செய்ததும், வீதியில் அவிழ்த்துவிடப்பட்டன.

சீறி பாய்ந்து ஓடிய மாடுகளை அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்துடன் விரட்டினர். தொடர்ந்து குறிப்பிட்ட இலக்கை குறைந்த விநாடிகளில் கடந்த மாட்டிற்கு முதல் பரிசாக ₹60,001, இரண்டாம் பரிசாக ₹50,001, மூன்றாம் பரிசாக ₹40,001 உட்பட மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், மாடுகள் முட்டியதில் காயமடைந்த பார்வையாளர்கள் 8 பேருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

மேலும், படுகாயமடைந்த 2 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழாவையொட்டி, வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரயிலில் அடிபட்டு மாடு பலியான பரிதாபம்

முன்னதாக, நேற்று காலை போட்டியில் பங்கேற்கும் மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படும் தெருவில் வழிகாட்டுதல் நடந்தது. இதில், மூஞ்சூர்பட்டு பகுதியை சேர்ந்த அசுரன் என்ற மாட்டிற்கு வழிகாட்டும்போது, திடீரென பிடியில் இருந்து விலகி ஓடியது. தொடர்ந்து, நிலங்கள், ஏரிகள் வழியாக சென்று, அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் ஓடியது. அப்போது, அவ்வழியாக எதிரே வந்த திருப்பதி எகஸ்பிரஸ் ரயில், அந்த மாட்டின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த, மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. பலியான இந்த மாடு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட விழாக்களில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்று, ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்ற காளையாக விளங்கியது. அந்த மாடு திடீரென பலியான சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: